பொது இடத்தில் தொழுகை ஏன்?.. லக்னோ லுலு மாலுக்கு எதிராக இந்து மகாசபா புகார்!

லக்னோ லுலு மாலில் தொழுகை நடத்தியாகக் கூறப்படும் மற்றொரு வீடியோ ஒன்றையும் அகில பாரத இந்து மகாசபா வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள லுலு மாலில் சிலர் தொழுகை நடத்தியாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இதையடுத்து பொது இடத்தில் தொழுகை நடத்துவதா என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்துத்துவ அமைப்பினர், இந்த மாலுக்கு இந்துக்கள் செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என அகில பாரத் இந்து மகாசபா அமைப்பு வலியுறுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக லுலு மாலின் பொது மேலாளர் சமீர் வர்மா அளித்த விளக்கத்தில், ”லுலு மால் நிர்வாகம் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறது. மாலில் மதம்சார்ந்த பிரார்த்தனைகளுக்கு அனுமதி இல்லை. இதனை கண்காணிக்க மால் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த லக்னோ மாலை உலகத்தரம் வாய்ந்த மாலாக மாற்ற விரும்புகிறோம். இந்த கனவை நனவாக்க அனைவரும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

image
மேலும் லுலு மால் நிர்வாகத்துக்கு எதிராக இந்து அமைப்பு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 153A (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295A (மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம்) உள்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், லக்னோ லுலு மாலில் தொழுகை நடத்தியாகக் கூறப்படும் மற்றொரு வீடியோ ஒன்றையும் அகில பாரத இந்து மகாசபா வெளியிட்டுள்ளது. இதை ‘லுலு மஸ்ஜித்’ என்று விமர்சித்துள்ள இந்து மகாசபாவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷிஷிர் சதுர்வேதி, “ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாலில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கே இந்துக்கள் மற்றும் பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் பிரார்த்தனை செய்ய மால் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாம்: 82 வயது மூதாட்டியை கடித்தே கொன்ற பிட்புல் நாய் – உ.பி.யில் பயங்கரம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.