அனல்பறந்த ஓபிஎஸ் – இபிஎஸ், காவல்துறை தரப்பு வாதங்கள் – நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?!

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்திருப்பதை எதிர்த்து இபிஎஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை நீதிபதி முதலில் படித்தார். அப்போது வீடியோ, போட்டோ ஆதாரங்களையும் காவல்துறை தாக்கல் செய்தது. அவற்றையும் பார்க்க வேண்டுமென காவல்துறை வக்கீல் கோரிக்கை விடுத்தார். மேலும், ‘கட்சி அலுவலகத்தை முதல் நாளில் மேலாளர் பூட்டியுள்ளார். அப்போது அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. முன்னமே A பார்ட்டி, B பார்ட்டி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது B பார்ட்டி அங்குவந்தபோது அவர்களை தடுத்தோம். கேட்காமல் சென்றதால் அதிமுக அலுவலகத்தில் வன்முறை ஏற்பட்டது’ என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வளவு நடந்தும் ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘உயர் காவல்துறை அதிகாரிகள் வரை அங்கு இருந்திராவிட்டால், உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். அங்கு அதிகாரிகள் இருந்ததால் தற்போது இருவர் மட்டுமே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இடையே குறுக்கிட்ட இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், பாதுகாப்பு வீரர்களை தவிர வேறு எந்த போலீசாரும் இல்லை’ என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
image
அதற்குள் வீடியோவை பார்த்து சிரித்த நீதிபதி, 
அலுவலகத்திற்குள் நுழைந்தபோது எடுகப்பட்ட வீடியோக்களில் ஏதும் காவல்துறை தாக்கல் செய்ததில் இல்லையே. டிவிக்களில் காட்டப்பட்டதில் இருந்ததில் 10%கூட போலீஸ் வீடியோவில் இல்லை என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது காவல்துறை தரப்பில், 
லத்தி சார்ஜ் செய்த பிறகுதான் போலீஸ் தரப்பில் வீடியோ எடுக்கப்பட்டது. ஆனால் டிவிக்கள் காலை முதலே அலுவலகத்தில் இருந்தார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், அதிமுக அலுவலகம் இரு தரப்பில் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் சிவில் வழக்கு நிலுவையில் இல்லை. இந்த இரு வழக்குகளும் யாரிடம் சாவியை ஒப்படைப்பது தொடர்பானதும் இல்லை. சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியையோ, சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. 
அப்போது நீதிபதி, 
ஏற்கனவே இபிஎஸ் தரப்பு அலுவலகத்தில் இருந்தபோது எப்படி சீல் வைத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு காவல்துறை, 
உரிமையியல் வழக்கு நிலுவையில் இருந்தால் சீல் வைக்க முடியாது. ஆனால் இது அதுபோல் இல்லை. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது. மேற்கொண்டு எந்த மோதலும் இல்லை என இரு தரப்பில் உத்தரவாதங்கள் அளிக்கவில்லை. இருவரும் முன்னாள் முதல்வராக உள்ளனர். அப்பகுதியில் பள்ளிகள் உள்ளன. அலுவலகத்தில் நுழைய தடைக்கோரி இருவரும் ஒருவருக்கொருவர் வழக்கு தொடர்வில்லை. இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுவரை இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை. சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தால் மேலும் பிரச்னை ஏற்படலாம். 15 பேர் கைது தொடர்பான ரிமாண்ட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதாக வருவாய் கோட்டாட்சியர் பதிவு செய்தவுடன் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது. இரு தரப்பும் அவரிடம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது.
image
அதற்கு நீதிபதி,
பொது சொத்து சேதம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் சேதத்தொகையை வசூலிக்கும் விதியை பயன்படுத்தி இருக்கலாமே. அதுபோல வசூலிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, வசூலிக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை விளக்கம் அளித்தது. 
அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 
காவல்துறை தெரிவித்துள்ள அறிக்கை குறித்து ஆட்சேப மனுவை திங்கட்கிழமை தாக்கல் செய்கிறோம். ஜூலை 11 காலை வரை இருவரின் கட்டுப்பாட்டில் தான் தலைமை அலுவலகம் இருந்துள்ளது. கட்சியில் எனது பதவி என்ன என்பதை கட்சி அலுவலக உரிமை தொடர்பான விசாரணையில் தீர்மானிக்க முடியாது. பெரும்பான்மையான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் மட்டுமே தொண்டர்கள் அனைவரும் இபிஎஸ் பக்கம் இருப்பதாக கருத முடியாது. கட்சி அலுவலகம் யாரிடம் இருக்கிறது என்றுதான் ஆர்.டி.ஓ பார்க்க வேண்டுமே தவிர யாருக்கு உரிமை உள்ளது என்பதை தீர்மானிக்க முடியாது. இரு தரப்பினருக்கும் இடையே உள்ள சர்ச்சையை நீதிமன்றத்தால் மட்டுமே தீர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
உடனே இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், 
என்ன நடந்தது என்பதற்கு வீடியோ ஆதாரங்களே போதுமானது. நான் தான் தலைமை நிலைய செயலாளர் என்பதை ஒபிஎஸ். ஒத்துக்கொள்கிறார். ஒபிஎஸ் அணி நுழைந்தபோது கட்சி அலுவலகத்திற்கு தலைமையக செயலாளர் என்ற பொறுப்பில் இருந்த அலுவலகம் சூறையாடப்பட்டு, கட்டிடத்தின் மாடியிலிருந்து ஆவணங்கள் வீசப்பட்டன. கட்சி அலுவலகம் அவருக்கு சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்து செல்ல வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். 
image
அதற்கு ஓபிஎஸ் தரப்பு, 
பொதுக்குழு நடக்கும்போது அலுவலகத்தை பூட்டும் நடைமுறையே இல்லை. தமிழகம் முழுவதிலிருந்தும் தொண்டர்கள் வருவதால் பூட்டுவதில்லை. நான் சென்றபோதே மாவட்ட செயலளர்கள் வாயிலில் அமர்ந்து தடுத்தனர். 200க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தில் தடுப்புகளை வைத்து தடுத்து கற்களை வீசினர். எங்கள் தரப்பு வீடியோ, போட்டோக்களையும் பார்க்க வேண்டும். நான் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முடியாது என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை.  ஜூலை 11 பொதுக்குழு நடைபெற்ற நாளன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்கிறோ. அதற்காக  நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளோம். உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக…
அனைத்து தரப்பு வாதங்களையும், பிரதிவாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, காவல்துறை பதில் மனுவுக்கு ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய ஒபிஎஸ் தரப்புக்கு அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமை (ஜூலை 18) தள்ளிவைத்து உத்தரவிட்டார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.