சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு (M.A,History) முதலாம் ஆண்டிற்கான இரண்டாம் பருவத்தேர்வில் ஆதிதிராவிடர் மக்களை மிகவும் இழிவுபடுத்தக்கூடிய வகையிலான ஒரு கேள்வி இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பெரியார் பல்கலைக்கழக கேள்வித் தாளில் ‘தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்தக் கேள்வி ஆதிதிராவிடர் வகுப்பினரை சிறுமைப்படுத்தும் செயலாக அமைந்துள்ளதாக கண்டனம் எழுந்த நிலையில், எஸ்சி எஸ்டி மாநில ஆணையம் பெரியார் பல்கலைக்கழகம் மீது தானாக முன்வந்து புகார் மனு பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இது பாடத்திட்டத்தில் வராத ஒரு பகுதி என்பது எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. Scheduled Caste என்ற ஆங்கில வார்த்தைக்கு “ஆதிதிராவிடர்” என்ற மொழி பெயர்ப்பைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும், “தாழ்த்தப்பட்டோர்” என்றோ “அரிஜன்” என்றோ தமிழில் குறிப்பிடக்கூடாது என்றும் சமூக நலத்துறையின் மூலம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த உத்தரவுகள் மதிக்கப்படாமல் மேற்சொன்ன கேள்வி தயாரிக்கப்பட்டதுடன், அதனை சரிபார்க்க வேண்டிய பல்கலைக்கழக அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறியிருக்கிறார்கள். தங்கள் கடமையைச் செய்யத் தவறிய பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் வரலாற்றுத் துறைத்தலைவர் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கம் கேட்டு ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.
இந்த வகையில் பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகளே சாதிய முறையில் இழிவுபடுத்துகின்ற பாடங்களையோ அல்லது மறைமுகமான கேள்விகளையோ அனுமதிப்பது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான சமூக வரம்பு மீறல் என்பது சுட்டிக்காட்டப்பட்டு, இதுபோன்ற செயல்களில் பல்கலைக்கழகங்கள் போன்ற பொது அமைப்புகள் ஈடுபடுவதை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாது. இந்நிகழ்வை மற்ற பல்கலைக்கழகங்களும், தமிழகத்தில் உள்ள மற்ற கல்லூரி மற்றும் கல்வித் துறையினரும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இதுபோன்ற செயல் நடக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அதை வளர்த்திட நினைக்கும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.” இவ்வாறு ஆணையம் தெரிவித்துள்ளது.