சேலம், அரசு மருத்துவமனையில் மூன்று குழந்தைகளுடன் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் சுற்றித்திரிந்த முதியவர்களை சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா மீட்டெடுத்து, அவர்களுக்கு அடைக்கலம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதற்கு பொதுமக்களிடம் பாராட்டு கிடைத்துவருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரப்பேட்டை பகுதியை சேர்ந்த முதியவர்கள், ராஜா – ராஜேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்களுடைய இளைய மகள் லாவண்யாவுக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 8 மாதங்களாக காசநோய் மற்றும் கேன்சரால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரின் கணவர், தன்னால் செலவு செய்து சிகிச்சை செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார். இதனால் ராஜாவும், அவர் மனைவி ராஜேஸ்வரியும் சேர்ந்து மகள் லாவண்யாவை மருத்துவ சிகிச்சைக்காக பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பாண்டிச்சேரியில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததால், பெருந்துறையில் உள்ள காசநோய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தைகளுடன் இருக்க முடியாததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
இங்கு தங்குவதற்கும், சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் தவித்துள்ளனர். மேலும் லாவண்யாவுக்கு கடந்த 8 மாதங்களாக காசநோய் பாதிப்பு இருப்பதால், குழந்தைகளிடம் தள்ளி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், லாவண்யாவின் பெற்றோர்களான முதியவர்கள் மற்றும் குழந்தைகளை சமூகநலத்துரை அதிகாரி மீட்டெடுத்து, அரசு மருத்துமனைக்குள் சமூக நலத்துறை மூலம் இயங்கும் ஒன் ஸ்டாஃப் சென்டரில் சேர்த்து, குழந்தைகளை பாதுகாத்து வருகின்றார். இச்சம்பவம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதாவிடம் பேசினோம்.
“சிகிச்சையில் உள்ள குழந்தைகளின் தாய், குணமடைய 6 மாத காலமாகும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதுவரையிலும் குழந்தைகளை தாயின் அருகே விடக்கூடாது என்று கூறியுள்ளனர். எனவே மருத்துவ சிகிச்சை முடியும் வரை குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தங்கும் வசதிகளை அதற்குரிய அதிகாரிகள் மூலம் பெற்றுத்தர இருக்கிறோம்” என்றார்.