சென்னை: நம்ம சென்னை செயலியில் நாம் அளித்த புகாரை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் மீண்டும் திறக்க முடியும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சி பொதுமக்களின் குறைகளை தீர்வு காண, 1913 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வருகிறது. இந்த எண்ணில் அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நம்ம சென்னை மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாயிலாக, பொதுமக்கள் தங்கள் குறைகளை புகைப்படம், வீடியோ எடுத்து அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதனால், நம்ம சென்னை செயலி பயன்பாடு அனைத்து தரப்பினரிடம் வரவேற்பை பெற்றது. தற்போது 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இச்செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை 1.08 லட்சம் புகார்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்த்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல், சொத்துவரி விபரங்கள் அறிதல், சொத்துவரி செலுத்துதல், தொழில் விபரம் அறிதல், வர்த்தக உரிமம் விபரம் அறிதல் போன்ற சேவைகள் நம்ம சென்னை செயலில் உள்ளன.
மேலும், கூடுதல் வசதியாக தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் புதுப்பித்தல், பிறப்புச் சான்றிதழில் குழந்தைகள் பெயர் சேர்த்தல், நிகழ்நிலையில் கட்டட திட்ட விண்ணப்பத்தின் நிலை அறிதல் போன்ற வசதிகள் விரைவில் இந்தச் செயலியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இந்நிலையில், நம்ம செயலியில் ஒரு புகார் அளித்த பின்பு அந்த புகார் மீண்டும் திறக்க முடியவில்லை என்று பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆதாவது நாம் அளித்த புகார் மீது மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்றால், அந்தப் புகாரை மீண்டும் திறந்து தகவல் அளிப்பது தொடர்பான வசதி இல்லை என்று தெரிவித்தனர்.
நம்ம சென்னை செயலியில் நாம் அளித்த புகாரை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் மீண்டும் திறக்க முடியும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த புகாரை மீண்டும் திறந்து தகவலை பதிவு செய்யலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதன் முழு விவரம்
குப்பை அகற்றுதல் – ஒரு நாள்
மரம் அகற்றுதல் – ஒரு நாள்
நாய் பிடித்தல் – ஒரு நாள்
சாலை பள்ளம் – 3 நாள்
தண்ணீர் தேக்கம் – 3 நாள்
தெரு விளக்கு – 3 நாள்
கட்டிட திட்ட அனுமதி – 7 நாள்
வரி மற்றும் தொழில் உரிமம் – 7 நாள்
பொதுமக்களின் தாங்கள் அளித்த புகார் முடித்து வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சியிடம் இருந்து பதில் வந்த நேரத்தில் இருந்து மேற்கண்ட காலத்திற்குள் புகார் மீண்டும் திறந்து அந்த புகார் தொடர்பாக கூடுதல் தகவல்களை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகாராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.