டொரொன்டோ-கனடாவில் கடந்த 1985ல் ஏர் – இந்தியா விமானத்தில் குண்டு வெடித்து 329 பேர் உயிரிழந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ரிபுதாமன் சிங் மாலிக், 75, கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 1985, ஜூன் 23ல், வட அமெரிக்க நாடான கனடாவின் டொரொன்டோ நகரில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பையை நோக்கி, ஏர் – இந்தியா விமானம் புறப்பட்டது. இதில், 268 கனடா நாட்டு குடிமக்கள் மற்றும் 24 இந்தியர்கள் உட்பட 329 பேர் பயணம் செய்தனர்.
கைது
விமானம் அட்லான்டிக் கடலுக்கு மேலே, 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ‘கார்கோ’ பிரிவில் இருந்த, ‘சூட்கேஸ்’ வெடிகுண்டு வெடித்ததில் அனைவரும் பலியாகினர். அன்றைய தினம், ஜப்பானில் இருந்து புறப்பட இருந்த ஏர் – இந்தியா விமானத்தில் வைக்கப்பட இருந்த சூட்கேஸ் குண்டு, விமான நிலையத்தில் வெடித்து சிதறியதில் இரண்டு ஊழியர்கள் பலியாகினர்.இது காலிஸ்தான் தீவிரவாதிகளின் சதிச்செயல் என, குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில், கனடாவில் வசித்த சீக்கியர் ரிபுதாமன் சிங் மாலிக் கைதானார். வழக்கு விசாரணையின் இறுதியில், ரிபுதாமன் சிங் மாலிக் மற்றும் மற்றொரு குற்றவாளியான அஜாய்ப் சிங் பாக்ரி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
விசாரணை
இந்த வழக்கில், இந்தர்ஜித் சிங் ரேயத் என்பவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தண்டனையை அனுபவித்த பின், 2016ல் விடுதலை ஆனார்.இந்நிலையில், ரிபுதாமன் சிங் மாலிக், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில், நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார். காரில் சென்று கொண்டிருந்த அவரை அடையாளம் தெரியாத நபர், மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலை என, போலீசார் கூறினர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கொலையான ரிபுதாமன் சிங் மாலிக், கனடாவில் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகள், பேரக் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement