சென்னை: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் வருத்தமளிக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதி குறித்த கேள்வி கேட்டிருப்பது நிச்சயமாக தவறு. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அந்த கேள்வித்தாளின் நகலை நானும் காலையில் பார்த்தேன். அதில் நான்கு சாதியின் பெயரைக் குறிப்பிட்டு, தாழ்த்தப்பட்ட சாதியைக் கூறுமாறு கேட்கப்பட்டிருந்தது.
ஒருபக்கம் நாம் திமுக ஆட்சி என்று கூறுகிறோம். சமூக நீதியென்று சொல்கிறோம். அந்தப் பல்கலைக்கழகத்திற்கு, திமுகவை தோற்றுவித்த திராவிடர் கழகத்தின் பெரியாரின் பெயரில் உள்ளது. அங்கேயே இப்படி நடந்துகொண்டிருக்கிறது.
அப்படியென்றால் என்ன சமூக நீதியை இவர்கள் பேசுகின்றனர்? எந்தவிதமான மனநிலையில் அங்கு பணியாற்றக்கூடிய பேராசிரியர்கள் எல்லாம் இருக்கின்றனர் என்பதைதான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்பது பாஜகவின் கருத்து” என்றார்.