கொழும்பு: இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இடைக்கால அதிபராக நேற்று பதவியேற்றார். இன்னும் ஒரு வாரத்தில் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என சபாநாயகர் யபா அபேவர்த்தனா கூறியுள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், மக்கள் போராட்டம் வலுத்துள்ளது. அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, மாலத்தீவு தப்பிச்சென்று, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் யபா அபேவர்த்தனாவுக்கு அனுப்பினார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
நாட்டை விட்டு வெளியேறும் முன்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால அதிபராக கோத்தபய நியமித்திருந்தார். அதன்படி, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய அதிபரை தேர்வு செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். புதிய அதிபரை தேர்வு செய்ய, நாடாளுமன்றத்தில் வரும் 20-ம்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இடைக்கால அதிபராக பதவியேற்ற பின், ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:
அதிபரை அழைக்கும்போது, மேதகு என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளேன். அத்துடன், அதிபரின் கொடி நீக்கப்படுகிறது. இனி தேசியக்கொடி மட்டுமே பயன்படுத்தப்படும். அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரான செயலுக்கு ஒரு போதும் வழிவகுக்க மாட்டேன்.
உணவு, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் தடைபடலாம். நாடு எதிர்நோக்கியுள்ள அபாய நிலையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் தங்கள் லட்சியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். நாட்டில் அமைதியை ஏற்படுத்தவும், சட்டம் – ஒழுங்கை காக்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அமைதியான போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். வன்முறையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினருக்கு அதிகாரமும், சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மகிந்த, பசில் வெளிநாடு செல்ல தடை
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச, கடந்த 12-ம் தேதி வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
இதையடுத்து ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடு தப்பிச் செல்ல தடை விதிக்க வேண்டும் என இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர், வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்ல தடை விதித்தது. இவர்கள் தவிர முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்கள் இருவர் உட்பட 3 முன்னாள் அதிகாரிகள் வெளிநாடு செல்லவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.