சென்னை: அதிமுகவில் தங்களுக்கு எதிரான நிர்வாகிகளை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அடுத்தடுத்து நீக்கி வருவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.
அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்ட நிலையில், கடும் சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதே பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ஓபிஎஸ் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்தார்.
இதற்குப் போட்டியாக இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக நேற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் 44 பேரை ஓபிஎஸ் நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
44 பேரை நீக்கிய ஓபிஎஸ்
கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக 44 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
அதன்படி, கட்சி தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைப்புச் செயலாளர் சி.விஜயபாஸ்கர், மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, புதுச்சேரி மாநில (கிழக்கு) செயலாளர் ஏ.அன்பழகன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ் (வடசென்னை வடக்கு – கிழக்கு), டி.ஜி.வெங்கடேஷ் பாபு (வடசென்னை வடக்கு-மேற்கு), நா.பாலகங்கா (தென் சென்னை தெற்கு – மேற்கு, வி.சோமசுந்தரம் (காஞ்சிபுரம்), திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் (செங்கல்பட்டு கிழக்கு), சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் (செங்கல்பட்டு மேற்கு), பா.பென்ஜமின் (திருவள்ளூர் மத்தியம்), வி.அலெக்சாண்டர் (திருவள்ளூர் தெற்கு), மாதவரம் வி.மூர்த்தி (திருவள்ளூர் கிழக்கு), பி.வி.ரமணா (திருவள்ளூர் மேற்கு) ஆகியோரும், எஸ்.ஆர்.கே.அப்பு (வேலூர் மாநகர்), த.வேலழகன் (வேலூர் புறநகர்), கே.சி.வீரமணி (திருப்பத்தூர்), சு.ரவி (ராணிப்பேட்டை), தூசி கே.மோகன் (திருவண்ணாமலை வடக்கு), அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (திருவண்ணாமலை தெற்கு) ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கே.ஏ.பாண்டியன் (கடலூர் கிழக்கு), ஆ.அருண்மொழிதேவன் (கடலூர் மேற்கு), இரா.குமரகுரு (கள்ளக்குறிச்சி), கே.அசோக்குமார் (கிருஷ்ணகிரி கிழக்கு), கே.பி.அன்பழகன் (தருமபுரி), ஜி.வெங்கடாஜலம் (சேலம் மாநகர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மாநகர்), கே.சி.கருப்பணன் (ஈரோடு புறநகர்), சி.மகேந்திரன் (திருப்பூர் புறநகர் கிழக்கு), கே.அர்ச்சுனன் (கோவை மாநகர்), பி.ஆர்.ஜி.அருண்குமார் (கோவை புறநகர் வடக்கு), டி.வினோத் (நீலகிரி), எம்.பரஞ்சோதி (திருச்சி புறநகர் வடக்கு), ப.குமார் (திருச்சி புறநகர் தெற்கு), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), எஸ்.பவுன்ராஜ் (மயிலாடுதுறை), ஆர்.காமராஜ் (திருவாரூர்), பி.கே.வைரமுத்து (புதுக்கோட்டை தெற்கு), பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை), எம்.ஏ.முனியசாமி (ராமநாதபுரம்), தச்சை என்.கணேசராஜா (திருநெல்வேலி), எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி தெற்கு), எஸ்.பி.சண்முகநாதன் (தூத்துக்குடி தெற்கு), டி.ஜான்தங்கம் (கன்னியாகுமரி மேற்கு) ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
21 பேரை நீக்கிய இபிஎஸ்
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் பொன்னையனுடன் செல்போனில் கலந்துரையாடிய நாஞ்சில் கோலப்பன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 21 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி இருப்பதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
இபிஎஸ்-சின் தற்போதைய நிலை மற்றும் கே.பி.முனுசாமி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற முன்னாள் செயலர் நாஞ்சில் கோலப்பன் ஆகியோர் பேசியதாக ஆடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆடியோ விவகாரத்தில் பேசப்பட்ட நாஞ்சில் கோலப்பன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 21 பேரை கட்சியில் இருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார். இதுதொடர்பாக இபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதற்காக எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் ஏ.சுப்புரத்தினம், புரட்சித் தலைவி பேரவை துணைச்செயலாளர் டி.மாறன், இலக்கிய அணி துணை செயலாளர் சிவில் எம்.முருகேசன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த தென்சென்னை என்.ஜெயதேவி, திருவள்ளூர் வளசை மஞ்சுளா பழனிச்சாமி, வேலூர் புறநகர் ஜி.சுரேஷ், வி.திருநாவுக்கரசு, திருச்சி என்.ஜவகர், தஞ்சாவூர் எல்.தயாளன், எம்.சரவணன், பசுவை என்.சதீஷ், என்.ஆர்.வி.எஸ்.செந்தில், எம்.ஏ.பாண்டியன், வி.கே.பாலமுருகன், ஹரிகிருஷ்ணன், ஆர்.சிவக்குமார், ஏ.சுகுமாரன், கே.ஜி.பரத், எல்.சதீஷ், எம்ஜிஆர் சதீஷ்ராஜ் மற்றும் நாஞ்சில் கோலப்பன் ஆகியோர் கட்சியின் அடிப்படைஉறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.
அதிமுகவில் தங்களுக்கு எதிரான நிர்வாகிகளை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அடுத்தடுத்து நீக்கி வருவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.