சென்னை: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி மற்றும் மேல் பவானியில் தலா 32 செமீ அதி கனமழை பெய்துள்ளது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழக, கேரள எல்லையில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 16-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி மற்றும் கோவை (மலைப்பகுதிகள்) மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
17-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.
15-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் மேல் பவானி, அவலாஞ்சி ஆகிய இடங்களில் தலா 32 செமீ., கூடலூர் சந்தையில் 17 செமீ., மேல் கூடலூரில் 16 செமீ. மழை பதிவாகியுள்ளது.