பாஜக அரசை அச்சுறுத்தும் சொற்கள்(?) அன்பார்லிமென்ட் வார்த்தைகள்… ஒரு பார்வை!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற திங்கட்கிழமை (18-ஆம் தேதி) தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 18 அமர்வுகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப் போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேசமயம் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதோடு நுபுர் ஷர்மா விவகாரம், அக்னிபத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வாதங்கள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.

வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய் ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜக வாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்திய பாராளுமன்றம்

இதேபோல, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரெளடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தினால்… அவை தலைவர்கள், அவை குறிப்பிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் வெளியிட்டபின் எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பினை பல்வேறு வடிவில் சமூக வலைத்தளங்களிலும், நேரடியாகவும் காட்டி வருகின்றன. நிலைமை இவ்வாறு இருக்க இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பை மட்டுமே வெளியிட்டிருப்பதாகவும், எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“இதற்கு முன்பும் இது போன்ற அன்பார்லிமென்டரி வார்த்தைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. காகிதங்கள் வீணாகாமல் இருக்க இப்போது அதை இணையத்தில் வெளியிட்டோம். எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை. நீக்கப்பட்ட சொற்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளோம். இது வழக்கமான நடைமுறைதான். 1100 பக்கங்கள் கொண்ட இந்த அகராதியை அவர்கள் (எதிர்க்கட்சியினர்) படித்திருப்பார்களா? படித்திருந்தால் இப்படி தவறான கருத்தைப் பரப்பியிருக்க மாட்டார்கள். இதற்கு முன்னர் 1954, 1986, 1992, 1999, 2004, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. 2010-ல் இருந்து ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது.

ஓம் பிர்லா

உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தச் சுதந்திரம் உள்ளது. அதே நேரத்தில் அவையின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும். நீக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் அனைத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியால் நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள். எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நீக்குவது கிடையாது” என்றார் சபாநாயகர் ஓம் பிர்லா தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிக்குமார், “இந்த அன்பார்லிமென்டரி முறை ஏற்கனவே இருப்பதுதான். இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் சேர்த்திருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 50 சொற்கள் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நீக்கம் செய்யப்பட்டவை. இவ்வாறாக பல்வேறு சொற்களைக் காட்டுகின்றனர்.

ஒரு சொல் நாம் பயன்படுத்தும் போது இரு வேறு விதமான சூழல்களில் அதற்கான பொருள் மாறுபடுவதாக இருக்கும். உதாரணமாக ‘இவர் என் மாமா’ உறவின் முறையில் சொல்வது., ‘அவர் எனக்கு மாமாவாக இருக்கிறார்’ இதற்கு வேறு அர்த்தம் வருகிறது. இவ்வாறாக எந்த சூழலில் எப்படிப் பயன்படுத்தினார்களோ அதற்கு ஏற்ற மாதிரிதான் மாற்றுகிறார்கள். அதை எல்லாம் அன்பார்லிமென்டரி என்று சொல்லும் போது அந்த சூழலோடு சேர்த்துத் தான் அன்பார்லிமென்டரி ஆகிறது. அதாவது ஏதோ ஒரு சூழலில் ஒரு சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அந்த சொல்லை மட்டும் எடுத்து அன்பார்லிமன்டரி என்று சொன்னால், அந்த சூழலை நீக்கிவிட்டுப் பார்க்கும் போது அந்த சொல்லுக்கான பொருள் வேறுமாதிரி இருக்கும்.

உதாரணத்திற்கு மக்களவை தலைவர் பற்றி பத்து சொற்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்’,‘நீதி வழங்க வேண்டும்’என்று சொன்னால் அது அன்பார்லிமென்டரி என்கிறார்கள். எங்களுக்கு நியாயம், நீதி வழங்குங்கள் என்று சொல்வது கோரிக்கை தானே! சபாநாயகரைப் பார்த்து என்ன தான் கேட்பது” என்று கேள்வியினை முன் வைக்கும் ரவிக்குமார், “ஜனநாயக நாட்டில் ஏதும் பேசக்கூடாது என்றால் எப்படி?” என்று தன் விமர்சனத்தை முன் வைக்கிறார்.

ரவிக்குமார்

“நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம், உண்ணாவிரதம் செய்யக் கூடாது என்று மற்றொரு தடை உத்தரவு போட்டுள்ளனர். எந்த விதத்திலும் வன்முறையோ, சட்டவிரோதமாக இல்லாமல் அறவழியில் நடக்கும் இது போன்ற போராட்டங்கள் நாடாளுமன்ற ஆரம்பக் காலத்திலிருந்தே நடத்துவது வழக்கம். இதெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ஒட்டுமொத்தமாக நாடாளுமன்ற அலுவல் முறையையும், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளையும் முடக்குவதா இருக்கிறது. நாடாளுமன்ற என்ற அமைப்போடு நீதித்துறை, ஊடகத்துறை, தேர்தல் ஆணையத்தை, மற்ற விசாரணை அமைப்புகளை அவர்களுக்கு சாதகமாக மாற்றுவது… என்று ஜனநாயக நிறுவனங்களும், அமைப்புகளும் முடக்கப்படுகிறது. எனவே இது எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது பாஜக அரசு, நாட்டில் உள்ள ஜனநாயகத்தை மொத்தமாக முடித்துவிட்டு ஒரு அதிகாரத்துவ ஆட்சியை நோக்கிப் போகிறார்கள் என்பது தெரிகிறது” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.