“என்னை சீண்ட வேண்டாம்; ஓ.பி.எஸ் பற்றிய உண்மைகளை வெளியிட்டால்…" – ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ், “ஆர்.பி.உதயகுமார் ஓ.பி.எஸ்ஸை தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். 2008-ல் அ.தி.மு.க.வுக்கு வந்த ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பி.எஸ் சிபாரிசில் அம்மா வாய்ப்பு கொடுத்து அமைச்சர் ஆக்கினார். அன்று சைக்கிளில் சுற்றிகொண்டிருந்த ஆர்.பி.உதயகுமார், இன்றைக்கு 5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கு எப்படி அதிபதி ஆனார்? இந்த பணம் யாரிடத்தில் இருக்கிறது, எங்கு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது, வெளிநாட்டு வங்கியில் இருப்பதெல்லாம் எனக்கு தெரியும் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளிக்க உள்ளது” எனக் கடுமையாக பேசினார்.

ஆர்.பி.உதயகுமார்

கோவை செல்வராஜின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆர்.பி.உதயகுமார் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாத செல்வராஜ் போன்ற வடிகட்டிய முட்டாளை வைத்துக்கொண்டு தலைமை தாங்கும் ஒ.பன்னீர்செல்வத்தின் நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

கோவை செல்வராஜ்

அ.தி.மு.க தொடங்கிய காலம் தொட்டு கட்சியின் கொள்கைக்காக உழைத்தது எங்கள் குடும்பம் என்ற வரலாறு கைக்கூலி கோவை செல்வராஜ் போன்றவர்களுக்கு தெரியாது.

மதுரை சட்டக்கல்லூரியில் பயின்றபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக செமஸ்டர் தேர்வு எழுதாமல் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றது பின்பு ஜெயலலிதா கவனத்திற்கு சென்று என்னை மாணவர் அமைப்பில் பணியாற்ற ஆணையிட்டார்.

2001-ல் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராகி, வருவாய்த் துறை அமைச்சராகி, 2001-ல் முதல்வராகி அதிமுக தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்து, இப்போது தொண்டர்களின் எதிர்காலம் என்னவானாலும் பரவாயில்லை அ.தி.மு.க.வை அழிப்பேன் என சூளுரைத்து செயல்படும் ஒ.பன்னீர்செல்வம் அவர்களே, உதயகுமாரை சீண்டி பார்க்க வேண்டாம், பயமுறுத்த வேண்டாம்.

ஆர்.பி.உதயகுமார்

சொத்து சேர்த்துள்ளதாக மிரட்டி பார்க்க வேண்டாம், திறந்த கதவோடு எத்தனை சோதனைக்கும் தயாராக உள்ளேன்.

கோவை செல்வராஜ் போன்ற கைக்கூலிகளை வைத்துக்கொண்டு ஒ.பன்னீர்செல்வம் என்னை மிரட்டி பார்த்தால் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கையாக சொல்கிறேன். பொது வாழ்க்கையில் தூய்மையோடு உழைத்து கொண்டிருக்கிறேன்.

ஒ.பி.எஸ் வீட்டிலும் எனது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை ஒரேநேரத்தில் சோதனை நடத்தட்டும். நான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கண்டறியப்பட்டால் பொது வாழ்க்கையிலிருந்து விலகிவிடுறேன். அதுபோல் நீங்கள் சொத்து குவித்தது தெரிய வந்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலகத் தயாரா?

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

பூச்சாண்டி காட்டும் வேலை என்னிடத்தில் ஆகாது. கட்சி நலனுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் பேசி வருகிறேன். சுய லாபத்திற்காக பேசவில்லை. ஓ.பி.எஸ் அவர்களே, இந்த நிமிடம் வரை உங்களை அண்ணனாக மதித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறேன். என்னை மிரட்டி பார்க்கும் ஒ.பி.எஸ் பற்றிய உண்மைகளை வெளியிட்டால் வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்படும்.” என ஆர்.பி. உதயகுமார் வீடியோவில் எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவளிக்கும் முக்கிய நிர்வாகிகள் மாற்றி மாற்றி ஊழல் புகார் சொல்வதையும், மிரட்டல் விடும் பேச்சையும் அ.தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.