திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர், வரிசையில் சென்றபோது நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், முகலிவாக்கம், வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் வேதாச்சலம் (64). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக திருமலைக்கு வந்தார். இரவு 9.45 மணிக்கு வேதாச்சலம் எஸ்.எம்.சி. சந்திப்பு அருகே வரிசையில் இருந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் திடீரென மயங்கி விழுந்தார்.பின்னர் அவர் 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேதாச்சலம் வரிசையில் உள்ள கழிவறையில் விழுந்து இறந்ததாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வேதாச்சலம் சடலத்தை தேவஸ்தான வாகனத்தில் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.