வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை சிக்க வைக்கவும், ஆட்சியை கலைக்கவும் சமூக ஆர்வலர் தீஸ்தா செடால்வட், முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலிடம் ரூ.30 லட்சம் பணம் பெற்றதாக சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில், நரேந்திர மோடி உள்ளிட்ட 64 பேருக்கு சிறப்பு புலனாய்வு குழு நற்சான்றிதழ் அளித்தது. இதனை எதிர்த்து, காங்., எம்.பி., இஷன் ஜாப்ரி மனைவி ஜாக்யா ஜாப்ரி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதன் பின்னர், குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சமூக ஆர்வலர் தீஸ்தா செதால்வட், ஸ்ரீகுமார் ஆகியோர் கைதாகினர். இருவரும் கடந்த 2ம் தேதி ஆமதாபாத்தில் உள்ள மெட்ரோபோலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சில நாட்களுக்கு முன்னர், ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசாரால் சஞ்சிவ் பட்டும் கைதானார்.
தீஸ்தா செதால்வட், சஞ்சிவ்பட், ஸ்ரீகுமார் ஆகியோர் மீதான கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தீஸ்தா மற்றும் ஸ்ரீகுமார் ஆகியோர் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு துணை போலீஸ் கமிஷனர் சோலங்கி சார்பில் அரசு வழக்கறிஞர்கள் மிதேன் அமீன் மற்றும் அமீத் படேல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரசிடம் இருந்து சலுகைகள் மற்றும் பணத்தை பெற்று கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர்கள், மிகப்பெரிய சதியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அகமது படேலுடன் பல முறை சந்தித்துள்ளனர். முதலில் ரூ.5 லட்சம் பெற்று கொண்ட அவர்கள், பின்னர் 2 நாட்கள் கழித்து ரூ.25 லட்சம் பெற்று கொண்டனர். கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து, கலவரம் ஏற்பட்ட பின்னர், மூவரும் சேர்ந்து, அப்போது முதல்வராக இருந்த மோடி உள்ளிட்ட பலர் மீது அவதூறு செய்ய உச்சநீதிமன்றம் முதல் பல கமிஷன்களில் பல மனுக்களை அளித்தனர் எனக்கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement