'மாற்றுக் கருத்துகளும் அவசியம்' – முகமது ஜுபைர் வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன?

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, மாற்றுக் கருத்துகளை உடையவர்களின் குரல்களும் ஜனநாயகத்துக்கு இன்றியமையாதவை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் (Fact Check) ‘ஆல்ட் நியூஸ்’ என்ற வலைதள செய்தி நிறுவனத்தில் இணை நிறுவனராக இருப்பவர் முகமது ஜுபைர். சமூக பிரச்னைகள் குறித்து அன்றாடம் குரல் கொடுத்து வரும் இவர், மத்தியில் ஆளும் பாஜகவை பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தச் சூழலில் டெல்லி போலீஸார் கடந்த ஜூன் 27-இல் முகமது ஜுபைரை கைது செய்தனர். 2018-ஆம் ஆண்டு இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஒரு திரைப்படத்தின் காட்சியை அவர் பதிவிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அவரது கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதனிடையே, நீதிமன்ற காவலின் கீழ் திகார் சிறையில் முகமது ஜுபைர் அடைக்கப்பட்டார். இவரது ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது.
image
இந்த சூழலில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இந்து மதம் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது. இந்து மதத்தினரும் சகிப்புத்தன்மை மிக்கவர்கள். அதனால்தான், இந்து மதக் கடவுள்களின் பெயரை தங்கள் வீடு, கடைகள், குழந்தைகளுக்கு அவர்கள் சூட்டுகின்றனர். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால், மத உணர்வை புண்படுத்தும் நோக்கில் இதை செய்தால் அது தவறு. மாற்றுக் கருத்து உடையவர்களின் குரல்களுக்கு நாம் என்றைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு அவசியம்” எனக் கூறினார்.
முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், அவர் மீது உத்தரப் பிரதேச காவல் நிலையங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்காததால் அவர் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.