டெல்லி: மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை பிரிவில் சேருவதற்காக நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கியூட்’ எனப்படும் தகுதி நுழைவு தேர்வின்போது, தேர்வு மையங்கள் குளறுபடி காரணமாக ஏராளமானோர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வியாண்டு முதல், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி,, மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET UG 2022) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜூலை 15, ஜூலை 16,ஜூலை 19,ஜூலை 20,ஆகஸ்ட் 4,ஆகஸ்ட் 5,ஆகஸ்ட் 6,ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த தேர்வானது, கணினி அடிப்படையில் நடத்தப்படும் என்றும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளதுடன், தேர்வானது இந்தியா முழுவதும் 554 நகரங்களிலும், இந்தியாவிற்கு வெளியே 13 நகரங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த தேர்வில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து 14.9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக, இந்தியா மற்றும் வெளிநாடுகள் உட்பட மொத்தம் 510 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வில் பங்கேற்கும் 98 சதவீதம் பேருக்கு அவர்கள் விரும்பி கேட்ட தேர்வு மையங்களே ஒதுக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் அறிவித்து இருந்தது. ஆனால், நேற்று தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில், பல மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் மாற்றப்பட்ட விவரம் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது.
இதனால், மாணவர்கள் அந்த இடத்துக்கு சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டதால் தேர்வை தவற விட்டனர். இது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தேர்வு மையங்கள் மாற்றத்தால் தேர்வை தவற விட்டர்களுக்கு ஆகஸ்ட்டில் நடக்கும் 2ம் கட்ட தேர்வின் போது வாய்ப்பு அளிக்கப்படும்,’ என தெரிவித்துள்ளனர்.