டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களை நடத்திவரும் எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப் போவதாக அறிவித்திருந்தார். சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரின் முழு பங்கை எலான் மஸ்க் வாங்க ஒப்பந்தம் பேசப்பட்டது.
அதைத் தொடர்ந்து போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்கத் தவறியதால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவைக் கைவிடுகிறேன் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க் இந்த முடிவெடுத்த நிலையில் ட்விட்டரின் தலைவர் பிரெட் டெய்லர் மஸ்கிற்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். “ட்விட்டர் டீலை முடிக்காவிட்டால் இழப்பீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை மஸ்க் வழங்க வேண்டும். இது தொடர்பாக டெலாவேர் கோர்ட் ஆஃப் சான்சரிக்கு (Delaware Court of Chancery) இந்த வழக்கைக் கொண்டு சென்று, அங்கே நாங்கள் வெற்றி பெறுவோம். என்று நம்புகிறோம்” என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால், ட்விட்டர் நிறுவனத்தின் CFO நெட் செகல் ஆகியோருக்கு எலான் மஸ்க் மெஸேஜ் ஒன்றை அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த மெசேஜில், “உங்கள் வழக்கறிஞர்கள் நமது இந்த உரையாடல்களைப் பயன்படுத்திச் சிக்கலை ஏற்படுத்துகின்றனர். அதை நிறுத்த வேண்டும்” என மஸ்க் குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. மஸ்க்கின் இந்த மெசேஜ், டீலை வேண்டாம் என அவர் அறிவிக்கும் முன்னரே அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.