சத்தியமங்கலம் அருகே சாலையில் நடமாடிய காட்டு யானையின் அருகே நடந்து சென்ற நபரை காட்டு யானை துரத்தி தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இவ்வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் பகல் நேரங்களில் நடமாடுகின்றன.
இந்த நிலையில் இன்று சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லை பகுதியில் உள்ள புளிஞ்சூர் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தனது குட்டியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியே நடந்து சென்ற ஒரு நபர் யானை சாலையில் நடமாடுவதை கண்டு சிறிதும் அச்சம் இல்லாமல் அலட்சியமாக யானையின் அருகே நடந்து சென்றார். குட்டி யானையுடன் நடந்து சென்ற காட்டு யானை திடீரென பின்னால் நடந்து வரும் நபரை ஆக்ரோஷத்துடன் துரத்த தொடங்கியது. யானை துரத்துவதை கண்ட அந்த நபர் மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தார்.
சிறிது தூரம் துரத்திக் கொண்டு வந்த காட்டு யானை பின்னர் தனது குட்டியை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானையின் அருகே அசால்டாக நடந்து சென்ற நபரை யானை துரத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM