நாடாளுமன்ற அவைகளில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்று குறிப்பிட்ட வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை, மக்களவை செயலகம் அண்மையில் வெளியிட்டிருந்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துகொண்டு இருந்த நிலையிலேயே, இனி நாடாளுமன்ற வளாகங்களில் எம்.பி-க்கள் போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது என மாநிலங்களவை செயலகம் சுற்றறிக்கை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, “நாடாளுமன்ற வளாகத்திலிருக்கும் காந்தி சிலையும் ஏன் நீக்கக் கூடாது? அப்படியே அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 19(1)-ஐயும் நீக்கிவிடுங்கள்” விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், மாநிலங்களவை செயலகத்தின் சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “கலந்துரையாடல் 2022’’ என்ற நிகழ்ச்சியின் கூட்டாட்சித் தத்துவம் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய கபில் சிபல், “மாநிலங்கள் தங்கள் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் முன்வைக்கும் திட்டக் குழுவானது நிதி ஆயோக் மூலம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இதில் உரையாடல் மற்றும் கலந்துரையாடல் செயல்முறை முற்றிலும் இல்லை. இதனால் நாம் இணைந்து இயங்கும் கூட்டாட்சியிலிருந்து வலுக்கட்டாயமாக ஒருதலைப்பட்சமாக ஆக்கப்பட்டுள்ளோம்.
மேலும் இங்கு, அரசியலமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக “மத்திய அரசியல்” தான் மாநிலங்களை ஆள்கிறது. இதில், ஆளுநர்களின் அலுவலகமும், மத்திய அமைப்புகளும் அரசாங்கத்தின் நீண்ட கைகளாக மாறிவிட்டன” என பாஜக-வை மறைமுகமாக விமர்சித்தார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், “நாடு முழுவதும் போராட்டங்களை நிறுத்த வேண்டும் என்று கூட அவர்கள், எங்களிடம் கேட்கும் நாள் வரலாம்” எனக் கூறினார்.