தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா தற்பொழுது ‘Thank you’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ’24’ புகழ் விக்ரம் குமார் இயக்கி இருக்கிறார். ரோம்காம் ஜானரில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, மாளவிகா நாயர், அவிகா கோர் மற்றும் சாய் சுஷாந்த் ரெட்டி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படம் ஜூலை 22 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி இருப்பதாக நாக சைதன்யா தெரிவித்திருக்கிறார். “கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, நிறைய மாறிவிட்டது. என்னைப் பொறுத்தவரை, ஒரு ஸ்கிரிப்டைக் கேட்கும் போது, மக்கள் அந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்ப்பார்களா அல்லது வீட்டிலேயே இருந்து பார்ப்பார்களா என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
நிறைய நல்ல படங்களைக் கூட மக்கள் வீட்டிலேயே பார்த்து மகிழ்வதை நான் கவனித்திருக்கிறேன். படங்களைத் தேர்ந்தெடுக்கக் கடந்த சில மாதங்களாக புதிய வியூகங்களை முயற்சி செய்து வருகின்றேன். இயக்குநர்கள் கூறும் கதாபாத்திரங்களையும், உணர்வுகளையும் தாண்டி நான் பல கோணங்களில் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் இப்போது மக்கள் வீட்டிலிருந்தபடியே நல்ல படங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். வீட்டிலிருந்து பார்ப்பதால் அவர்கள் எந்த ஒரு படத்தையும் அவமதிக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. கொரோனா தொற்றுக்குப் பிறகு மக்களிடையே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர்களுடைய முக்கியத்துவம் மாறியிருக்கிறது” என்றும் அந்நேர்காணலில் கூறியிருக்கிறார்.