புதுடெல்லி:
லடாக் எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, இந்தியா – சீனா நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான 16வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
பின்னர் அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருதரப்பு வீரர்களுக் கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்களும் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த மோதலுக்குப் பின்னர் எல்லையில் இரு நாடுகளும் கூடுதல் ராணுவ வீரர்களை நிறுத்தியதால் பதற்றம் அதிகரித் தது. பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் நிலையில் இதுவரை 15 சுற்றுபேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், லடாக் எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, இந்தியா – சீனா நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான 16வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.