வடக்கு கிரீஸில் உள்ள பேலியோச்சோரி கவாலாஸ் அருகே சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மர்மம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்தை நேரில் பார்த்த கிராம மக்கள் தெரிவிக்கையில், அந்த விமானமானது தீ பற்றிய நிலையிலேயே தரையிறங்கியதாகவும், வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கையில், விமான விபத்து தொடர்பில் தகவல் வெளியான நிலையில் 15 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 7 தீயணைப்பு வாகனங்களை சம்பவப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஆனால் வெடிப்பு சம்பவம் காரணமாக அவர்களால் விமானத்தை நெருங்க முடியவில்லை என கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் அந்த விமானமானது உக்ரேனிய நிறுவனத்திற்கு சொந்தமான Antonov An-12 சரக்கு விமானம் எனவும்,
செர்பியாவிலிருந்து ஜோர்தான் செல்லும் வழியில் என்ஜின் கோளாறு காரணமாக அருகிலுள்ள கவாலா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்குமாறு விமானி கோரியுள்ளார்.
ஆனால் விமான நிலையம் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த விமானத்தில் 8 பேர் பயணித்துள்ளதாகவும், விமானத்தில் ஆபத்தான சரக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.
விமானம் தீ விபத்தில் சிக்கியுள்ளதை அடுத்து, அதில் பயணித்தவர்கள் நிலை தெரியவில்லை எனவும், அப்பகுதியில் உள்ள மக்களை மாஸ்க் அணிந்துகொள்ள பொலிசார் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.