சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து ஓபிஎஸ் விரைவாக நலம்பெற முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சில நாட்களாக சளி பிரச்சினை இருந்துவந்தது. இதனால், நேற்று முன்தினம் கரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் உடல்நிலை குறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை மருத்துவ சேவைகள் பிரிவு இயக்குநர் மருத்துவர் ஆனந்த் மோகன் பால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லேசான கரோனா அறிகுறிகளுடன் ஜூலை 15-ம் தேதி தனிப்படுத்துதல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் வாழ்த்து
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைபெற்றுவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பதிவில், “முன்னாள் முதல்வர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் முழு நலம் பெற வேண்டும் என்று விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.