புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து பேசினார். அவர் நிகழ்ச்சியில் கூட்டத்தினரின் முன் பேசும்போது, ஓட்டுகளை பெறுவதற்காக இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் ஆபத்து நிறைந்தது. நாட்டின் அரசியலில் இருந்து அவை நீக்கப்பட வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த கலாசாரம் மிக ஆபத்து நிறைந்தது. இந்த கலாசாரத்துடன் இணைந்திருப்பவர்கள், புதிய விரைவுசாலைகளை, புதிய விமான நிலையங்களை அல்லது பாதுகாப்பு பகுதிகளை உங்களுக்காக கட்டமைக்கவே மாட்டார்கள். இந்த எண்ணங்களை நாம் வீழ்த்த வேண்டும் என பேசினார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, மாநிலங்கள் மற்றும் மத்தியில் உள்ள இரட்டை இயந்திரம் கொண்ட அரசாங்கங்கள், இலவச பொருட்கள் வினியோகம் தவறு என குறிப்பிடவில்லை. ஆனால், மாநிலத்தின் வருங்கால மேம்பாட்டுக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என கூற வருகிறோம் என்று பேசினார்.
பிரதமர் மோடி இலவச கலாசாரம் பற்றி குறிப்பிட்டதற்கு பதிலளிக்கும் வகையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறும்போது, என் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. எனது தவறு என்ன? என நான் கேட்க விரும்புகிறேன். டெல்லி அரசு பள்ளிகளில் 18 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு தரமுள்ள, இலவச கல்வி வழங்கப்படுகிறது. இது ஒரு குற்ற செயலா?
2 கோடி பேருக்கு இலவச மருத்துவம் வழங்கும் ஒரே நகரம் டெல்லி. சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கிறது. இலவச மற்றும் தரமுள்ள மருத்துவ சேவை, டெல்லி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.
இதனை 1947 மற்றும் 1950ம் ஆண்டுகளிலேயே அவர்கள் செய்திருக்க வேண்டும். நாங்கள் நாட்டின் அடித்தளம் அமைப்பவர்கள். இது இலவச பொருட்களை வழங்குவது அல்ல. என் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுபவர்கள், அவர்களுக்காக விமானங்கள் மற்றும் தனியார் ஜெட் விமானங்களை வாங்க ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவழிக்கின்றனர்.
கெஜ்ரிவால் தனக்காக விமானங்களை வாங்கவில்லை. டெல்லியில் பல விசயங்களை இலவசம் என கொண்டு வந்தபோதும், எங்களது பட்ஜெட் லாபத்துடனேயே உள்ளது. இதனை நான் கூறவில்லை. சமீபத்திய தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.