கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை பராமரித்து, பாதுகாக்கும் பணியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்புத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பெரிய கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை படித்து, அதிலுள்ள அரிய தகவல்களை திரட்டி, அவற்றை நூலாக பதிப்பிக்க அறநிலையத் துறை சார்பில் பதிப்புத்துறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த துறையைச் சேர்ந்த சுவடியியல் வல்லுநர்கள் கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை பராமரித்து, பாதுகாக்கும் பணியை திருமாந்துறை பாலாம்பிகை உடனாய ஆம்பரவனேஸ்வரர் கோயிலில் முதலில் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இந்த பணி ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இங்குள்ள ஏறத்தாழ 7,000 ஓலைகளை பராமரிக்கும் பணியில் இதுவரை ஏறத்தாழ 2,000 ஓலைகளை சர்ஜிக்கல் ஸ்பிரிட் கொண்டு தூய்மைப்படுத்தி, லெமன்கிராஸ் எண்ணெய்யை தடவி, அவற்றை காய விட்டு, பிரிவு வாரியாக அட்டவணைப்படுத்தி, அதன் உள்ளடக்கத்தை சிறுகுறிப்பாக எழுதி வைத்து பாதுகாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த ஓலைச் சுவடிகளில் கோயிலுக்கு நிவந்தங்கள், கொடைகள், உபயங்கள் அளித்தவர்களின் விவரங்கள், நைவேத்தியத்துக்கு உரிய பொருட்கள், அதற்கான செலவுகள், தோப்புகளிலிருந்து கிடைக்கும் பொருட்கள், திருவிழாக்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பல்வேறு வட்டார வழக்கு வார்த்தைகளும்இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உலக தமிழாராய்ச்சி நிறுவன சுவடியியல்துறை பேராசிரியரும், இப்பணியின் ஒருங்கிணைப்பாளருமான சு. தாமரைப்பாண்டியன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
தமிழகத்தில் ஓலைச்சுவடிகளை தேடித் தேடிச் சென்று அவற்றை சேகரித்து நூலாக பதிப்பித்த உ.வே.சா,சி.வை.தாமோதரம் பிள்ளை, வையாபுரி பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோரது காலத்துக்குப் பிறகு அவற்றை ஆவணப்படுத்தும் பணி பெருமளவில் நடைபெறவில்லை.
இன்றும் தமிழகத்தில் லட்சக்கணக்கான தமிழ் ஓலைச்சுவடிகள் பல்வேறு நிறுவனங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் உள்ள பழங்கால ஓலைச்சுவடிகள் பல பாதுகாப்பற்ற நிலையில் பராமரிக்கப்படாமலேயே உள்ளன.
பழங்கால ஓலைச்சுவடிகள் தமிழர்களின் மரபுகள் தொடர்பான ஆவணங்களாகும். அவற்றை தூய்மைப்படுத்தி, அதை பராமரித்து, பாதுகாக்கவும், அதில் உள்ளவற்றை படித்து, முக்கியத் தகவல்களை ஆவணப்படுத்தி, நூலாக்கம் செய்வதும்தான் இதன் முக்கிய பணிகள். இந்த அரிய பணியை மேற்கொள்வதற்காகத்தான் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் அறநிலையத்துறையில் பதிப்புத் துறையை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஓலைச்சுவடிகளில் அரியதகவல்கள் இருந்தால் அது தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வோம்.
சென்னையில் பதிப்புத்துறைக்கு தனிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு ஓரிடத்திலேயே இந்த ஓலைச்சுவடிகளை வைத்து பராமரிப்பு செய்து பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
திருவானைக்காவல் கோயிலில் உள்ள ஓலைச்சுவடிகள் சுருணை சுவடிகள் வகையைச் சார்ந்தது. இதில் கோயில் கணக்குகள், கோயில் நிர்வாகம், கொடைகள், பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பாகதான் அதிகமான விவரங்கள் உள்ளன.
திருவானைக்காவல் கோயிலைத் தொடர்ந்து ஜூலை 18-ம் தேதி (நாளை) முதல் ரங்கம்ரங்கநாதர் கோயிலில் உள்ள ஓலைச்சுவடிகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். அதன் பிறகு தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆகியவற்றில் உள்ள ஓலைச்சுவடிகளையும் பராமரித்து பாதுகாக்கும் பணிகள் நடைபெறவுள்ளன என்றார்.