மும்பை: மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்தின் பெயர் சத்ரபதி சாம்பாஜி நகர் என்றும், உஸ்மனாபாத்தின் பெயர் தாராஷிவ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார். ஷிண்டே முதல்வராகவும், பாஜ.வை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர். இன்னும் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, அவுரங்காபாத்துக்கு சாம்பாஜி நகர் என்றும் உஸ்மனாபாத்துக்கு தாராஷிவ் என்றும் நவிமும்பை விமான நிலையத்துக்கு டி.பி.பாட்டீல் விமான நிலையம் என்றும் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். இதற்கான ஒப்புதலை அமைச்சரவை அளித்து விட்டதாகவும் கடந்த மாதம் 29ம் தேதி அறிவித்தார். பின்னர், தாக்கரே அரசு கவிழ்க்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஷிண்டே தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அவுரங்காபாத்தின் பெயர் சத்ரபதி சாம்பாஜி நகர் என்றும், உஸ்மனாபாத்தின் பெயர் தாராஷிவ் என்றும் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், நவிமும்பை விமான நிலையத்துக்கு டி.பி.பாட்டீலின் பெயரை சூட்டவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.