கராச்சி,
இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா நகரில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், நடுவழியில் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி விமானி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதன்பின்னர் விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 2 வாரங்களில் இந்திய விமான நிறுவனமொன்றின் விமானம் கராச்சியில் தரையிறக்கம் செய்யப்படுவது இது 2வது முறை ஆகும்.
இதுபற்றி இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரிகள் கூறும்போது, ஷார்ஜா-ஐதராபாத் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது விமானிக்கு தெரிந்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு திருப்பி விடப்பட்டு அந்நகரில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
அந்த விமானத்தில் இருந்த பயணிகளை ஐதராபாத் நகருக்கு அழைத்து வருவதற்காக கூடுதல் விமானம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.