தலைநகர் டெல்லியில் 15 வயது சிறுமி சிறார் வதைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சம்பவத்தை பெற்றோரிடம் சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில், சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு டெல்லியில் நங்கோலாய் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி செருப்பு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். தொழிற்சாலையின் மேலாளரான 31 வயதுடைய ஜெய் பிரகாஷ், தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, வீட்டு வேலைகளுக்கு உதவியாக கடந்த ஜூலை 5-ம் தேதி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அன்றே சிறுமியை சிறார் வதைக்கு உள்ளாக்கி உள்ளார் ஜெய் பிரகாஷ்.
சம்பவம் நடந்த சில தினங்களுக்குப் பிறகு, சிறுமி தான் சிறார் வதை செய்யப்பட்டதை வீட்டில் யாரிடமாவது சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில், பணி முடிந்து சாலையில் வீடு நோக்கி சென்றுச் கொண்டிருந்த சிறுமியின் வாயில் ஜெய் பிரகாஷ் வலுகட்டாயமாக ஆசிட்டை ஊற்றியுள்ளார். அதன் பின், சாலையிலிருந்து வீடு நோக்கி ஓட்டம் பிடித்த சிறுமி, வீட்டை அடைந்ததும் மயங்கி உள்ளார்.
அதனை அடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமியை பெற்றோர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க, தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார். சிறுமியின் தந்தை நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளார். புகாரை அடுத்து, சிறுமியிடம் வாக்குமூலத்தைப் பெற்ற காவல்துறையினர், ஜெய் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து பேசியுள்ள டெல்லி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர்,’ ஜெய் பிரகாஷ் சிறுமியின் வாயில் ஊற்றியது ஆசிட்தானா என்பது நிரூபணமாகவில்லை. சிறுமியின் வாக்குமூலம் மற்றும் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளை வைத்து, ஜெய் பிரகாஷ் மீது ஐபிசி 307, 376, 34 மற்றும் போக்சோ பிரிவு 6 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தச் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணையம், சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் படி, டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவால், ‘15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த குழந்தையைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளதாகவும் மகளிர் ஆணையத்துக்கு முக்கியப் புகார் வந்துள்ளது. சிறுமியை கொலை செய்வதற்காக, ஆசிட் குடிக்க வற்புறுத்தப்பட்டுள்ளார். மகளிர் ஆணையம் சிறுமிக்கும், சிறுமியின் குடும்பத்துக்கும் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைநகரான டெல்லியின், இது போன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.