சென்னை: சின்னசேலம் பள்ளி மாணவி பலியான விவகாரத்தில்,”தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும். . இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்.
உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார், மாணவியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் தமிழக பாஜக இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.