விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கடந்த ஒரு வருட காலமாகப் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பணிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கூகையூர் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சாத்தூர், முக்குராந்தல் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிக்காக கூகையூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து விபத்து ஏற்பட்டது.
இந்த மண்சரிவில் சக்திவேலும், கிருஷ்ணமூர்த்தியும் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடினர். அதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு வீரர்கள், ஜேசிபி உதவியுடன் மண்ணுக்குள் புதைந்த இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மண்ணுக்குள் புதைந்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
அதையடுத்து இருவரின் சடலங்களும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து சாத்தூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.