கரூர்: காவிரி மாயனூர் கதவணைக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு நொய்யல் பகுதியில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணியளவில் 119.29 அடியாக உயர்ந்துள்ளது. இது ஓரிரு நாட்களுக்குள் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டும். எனவே மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 50,000 கனஅடி முதல் 1 லட்சம் கன அடி வரை எந்த நேரத்திலும் திறந்துவிடப்படலாம்.
பொதுமக்களுக்கு தடை: திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும், எனவே, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
வெள்ள நீர் புகும் அபாயமுள்ள காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மேலும், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பிலும், தண்டோரா, ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று தெரிவித்திருந்தார்.
மேட்டூர் அணை இன்று (ஜூலை 17) காலை 8 மணிக்கு நிரம்பியது. அணைக்கு நீர்வரத்து 1,24,113 கனஅடி நீர் வரும் நிலையில் 1.23 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. மாயனூர் கதவணைக்கு நேற்று 17,784 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருந்த நிலையில் அவை காவிரி மற்றும் வாய்க்கால்களில் திறக்கப்பட்டது.
மாயனூர் கதவணைக்கு இன்று (ஜூலை 17) காலை 6 மணிக்கு நீர்வரத்து 66,867 ஆக அதிகரித்தது. மதியம் 2 மணிக்கு இது 1,00,896 கன அடியாக அதிகரித்தது. இதில் 99,876 கன அடி காவிரி ஆற்றிலும், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் தென்கரை வாய்க்கால் ஆகியவற்றால் தலா 400 கன அடியும, கட்டளை மேட்டு வாய்க்காலில் 200 கன அடிநீரும் திறக்கப்பட்டுள்ளது.
தண்டோரா எச்சரிக்கை
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து இன்று (ஜூலை 17) படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் காவிரி ஆற்றில் யாரும் இறங்கவேண்டாம் என தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமராவதி
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் கடந்த 13ம் தேதி மதியம் 1 மணியளவில் 82 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 12,500 கன அடிநீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்படும் சூழ்நிலை இருப்பதாகவும் எனவே, அமராவதி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டது.
கடந்த 14ம் தேதி அமராவதி ஆற்றில் 1,025 கன அடியாக இருந்த நீர் திறப்பு, 15ம் தேதி 1,746ஆகவும், 16ம் தேதி 2,905 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
அமராவதி ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் யாரும் ஆற்றுக்குள் இறங்கவேண்டாம் என கரூர் கொளந்தானூர் பகுதியில் நேற்று அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் அமராவதி ஆற்று நீர் திறப்பு இன்று (ஜூலை 17) 2,973ஆக அதிகரித்துள்ளது.