லலித் மோடி: ஜெயிலுக்குப் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்… உலக அழகியுடன் டேட்டிங் போகிறார்!

லலித் மோடி… இது ஒரு சர்ச்சைக்குரிய பெயர். ஐ.பி.எல் முன்னாள் தலைவரான இவரது தலைமையில்தான், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் 2010-ம் ஆண்டுவரை நடைபெற்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவர், ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர், பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் துணைத் தலைவர் என ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத மன்னனாக லலித் மோடி விளங்கினார்.

லலித் மோடி

கிரிக்கெட் அமைப்புகளில் முக்கிய நிர்வாகியாக இருப்பவர்கள், அதிகார மையங்களுடன் நெருக்கமாக இருப்பது சகஜமான ஒன்று. அந்த வகையில், பல வி.வி.ஐ.பி-க்களுடன் லலித் மோடிக்கு நெருக்கம் அதிகம். குறிப்பாக, ராஜஸ்தான் மாநில முதல்வராக பா.ஜ.க-வின் வசுந்தராராஜே சிந்தியா இருந்தபோது, அவருக்கு நெருக்கமானவராக லலித் மோடி இருந்தார். அப்போது, ‘சூப்பர் முதல்வர்’ என்று லலித் மோடியை ராஜஸ்தான் அரசியல் வட்டாரத்தில் அழைத்தார்கள். ராஜஸ்தானில் ரம்பாக் அரண்மனையில் தங்குவது லலித் மோடியின் வழக்கம். அப்போது, அவரைச் சந்திக்க மிகப்பெரிய தொழிலதிபர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் வரிசையில் காத்திருப்பார்கள்.

2015-ம் ஆண்டு, லலித் மோடிமீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கிளம்பின. நிதி மோசடி, நிதி முறைகேடு உட்பட பல வழக்குகளில் அவர் சிக்கினார். கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்துவந்த லலித் மோடி, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். லலித்மோடிக்கு பாஸ்போர்ட் பெற்றுத்தர, மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே சிந்தியாவும் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டுக்காக, அவர்கள் இருவரையும் பிரதமர் மோடி பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. லலித் மோடிக்கு ஆதரவாக நீதிமன்ற ஆவணங்களில் கையெழுத்திட்டதாகவும் வசுந்தராராஜே சிந்தியா மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

வசுந்தரா ராஜே , லலித் மோடி,
சுஷ்மா ஸ்வராஜ்

இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களில் யாரெல்லாம் தன்னுடன் தொடர்பில் இருந்தனர் என்று லலித் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பெயர் பட்டியல் ஒன்றை வெளிட்டார். இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சராக இருந்தபோது தனக்கு எதிராக செயல்பட்டார் என்றும், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க பிரணாப் உத்தரவிட்டார் என்றும் லலித்மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார். அதையடுத்து, அவதூறான கருத்துகளை லலித் மோடி தெரிவித்ததாக, குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் சார்பில் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

2009-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளுக்கான உரிமைகளை வழங்கியதில் நிதி முறைகேடுகளிலும், நிதி மோசடிகளிலும் ஈடுபட்டதாக அவர் மீது அமலாக்கத்துறையில் வழக்குகள் இருக்கின்றன. அந்த வழக்குகள் தொடர்பாக, சிங்கப்பூர், மொரீசியஸ் நாடுகளின் சட்ட உதவியை அமலாக்கத்துறை நாடியது.

நிதியைத் தவறாகக் கையாண்டது, கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமையை வழங்கியதில் கிரிக்கெட் அமைப்பை ஏமாற்றியது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து லலித் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை காவல்துறையில் 2010-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் என்.சீனிவாசனால் புகார் அளிக்கப்பட்டது.

லலித் மோடிக்கு எதிரான கிரிமினல் வழக்கு தொடர்பாக டெல்லி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தியது. பிரிட்டனில் லலித் மோடி வசிக்கும் இடத்திலிருந்து அவரை விசாரணைக்கு கொண்டுவர இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸை அமலாக்கத்துறை வெளியிட்டதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு செய்திகள் பரபரத்தன.

சுஷ்மிதாவுடன் லலித் மோடி

வெளிநாடுகளில் பயணிப்பதற்கு அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியதாகவும் சர்ச்சை எழுந்தது. அந்நிய நிதி பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தை மீறியது தொடர்பான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை விசாரித்துவருகிறது.

லலித் மோடி விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கிளப்பியதால், நாடாளுமன்றம் முடங்கியது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாகவும், ஆனால், அவையை முடக்குவதிலேயே எதிர்க்கட்சிகள் குறியாக இருப்பதாகவும் அன்றைய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். இப்படியாக, ஒரு காலத்தில் இந்திய அரசியலிலும், நாடாளுமன்றத்திலும் லலித் மோடி விவகாரம் புயலைக் கிளப்பியது.

மோசடி வழக்குகளில் சிக்கிய லலித் மோடி, காவல்துறையின் பிடியில் சிக்காமல், லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். இந்த நிலையில், தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என்னில் சரி பாதி சுஷ்மிதா சென்..’ என சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். மாலத்தீவு உள்ளிட்ட இடங்களில் முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்னுக்கும் லலித் மோடிக்கும் இடையிலான உறவு ஒன்பது ஆண்டுகளாக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அப்படியென்றால், நிதி மோசடி வழக்குகளில் சிக்கி, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வெளிநாட்டுக்கு ஓடிய நேரத்தில், சுஷ்மிதா சென்னுடன் அவர் ‘கம்மிட்’ ஆகியிருக்கிறார். ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி மோசடிகளில் ஈடுபட்ட ஒருவரால், ஆட்சியாளர்களின் உதவியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முடிந்திருக்கிறது. தற்போது முன்னாள் உலக அழகியுடன் டேட்டிங் சென்றிருப்பதாக தன் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். லலித் மோடிகளின், நீரவ் மோடிகளின், விஜய் மல்லையாக்களின் உலகமே வேறு தான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.