கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட டோங்கன் எரிமலை வெடிப்புக்குப் பிறகு நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் தோன்றும் வானம் வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமான நிறங்களில் காட்சியளிக்கின்றன.
இதுகுறித்து அண்டார்டிகா, நியூசிலாந்தின் அறிவியல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அண்டார்டிகா பகுதிகளில் காணப்படும் வானம் ஊதா, இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறங்களுடன் வித்தியாசமான வண்ணங்களுடன் காணப்படுகின்றன. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வண்ணமயமான இந்த வானத்தை தங்கள் கேமராக்களில் படம் படித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது பற்றிக் கூறிய நியூசிலாந்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் ஜோர்டி ஹென்ட்ரிக்ஸ், “அண்டார்டிகா டோங்காவிலிருந்து சுமார் 7,000 கி.மீ தொலைவில் இருந்தாலும், நாங்கள் ஒரே வானத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். எனவே அங்கும் இங்கும் ஒரே மாதிரியான வானம் தோன்றுகின்றன” என்றார். மேலும் சல்பேட் துகள்கள், கடல் உப்பு, நீராவி போன்றவை ஒன்றாக சேர்ந்து உண்டாகும் ஏரோசல்கள் காற்றில் பரவுவதன் விளைவாக வானம் இப்படி ஊதா நிறத்தில் காணப்படலாம் என்றும் கூறப்படுகிறது.