”நான் பிசிசிஐயில் சேர்ந்தபோது அதன் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடிதான் இருந்தது. எனக்கு தடை விதித்தபோது பிசிசிஐ வங்கிக்கணக்கில் ரூ.47,680 கோடி இருந்தது” எனக் கூறியுள்ளார் லலித் மோடி.
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் லலித் மோடி. 2008ஆம் ஆண்டு முதல் 2010 வரை ஐபிஎல் தலைவராக லலித் மோடி பதவி வகித்து வந்தார். 2010 ஐபிஎல் சீசனில் விதிமுறைகளை மீறியது, நிதி மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் லலித் மோடி மீது வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்தவுடன் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து லலித் மோடிக்கு, பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. இதனிடையே, இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து எனக் கூறி லண்டனுக்கு சென்ற லலித் மோடி, தொடர்ந்து வெளிநாட்டிலேயே இருந்து வருகிறார்.
இந்நிலையில் லலித் மோடி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில், ”பிறக்கும்போதே டைமண்ட் ஸ்பூனுடன் பிறந்தவன் நான். 2005ஆம் ஆண்டில் எனது பிறந்தநாளான நவம்பர் 29ஆம் தேதியன்று பிசிசிஐயில் சேர்ந்தேன். நான் பிசிசிஐயில் சேர்ந்தபோது அதன் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடிதான் இருந்தது. எனக்கு தடை விதித்தபோது பிசிசிஐ வங்கிக்கணக்கில் ரூ.47,680 கோடி இருந்தது என நினைக்கிறேன். நான் எவரிடமும் அரசுரீதியிலான உதவி கேட்கவில்லை லஞ்சமும் வாங்கவில்லை. நான் தலைமறைவாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறீர்கள். எந்த நீதிமன்றம் என்னை குற்றவாளி என்று சொன்னது என்பதை சொல்லுங்கள் பார்ப்போம். இந்தியாவில் வணிகம் செய்வது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாம்: பாகிஸ்தானில் உள்ள பூர்வீக வீட்டுக்கு சென்ற 90 வயது இந்திய மூதாட்டிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM