பயணிகளுடன் ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத் கிளம்பிய இண்டிகோ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இண்டிகோ விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது தொடர்பாக, இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், “இண்டிகோ 6E-1406 என்ற விமானம் இன்று ஷார்ஜாவிலிருந்து புறப்பட்டு ஹைதராபாத் வந்து கொண்டிருந்தது. இந்த பயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக விமானி தெரிவித்தார். இதையடுத்து, விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். கராச்சியில் சிக்கியுள்ள பயணிகள் மாற்று விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படவுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது கடந்த 2 வாரங்களில் மட்டும் பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறக்கப்பட்ட 2-வது விமானமாகும். ஏற்கெனவே ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.