பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, ஜூலை-15 அன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் அவரது பிறந்தநாள் விழா, ‘கல்வி பெருந்திருவிழாவாக’ கொண்டாடப்பட்டது.
மகாஜன சங்கம் சார்பில், கல்வித்திருவிழா நடத்தப்பட்டது. இதில் 1500 பெண்கள் முளைப்பாரி எடுத்தனர். மாணவ-மாணவிகளின் சிலம்பாட்டம், மான் கொம்பு ஆட்டம், கோலாட்டம், மேளதாளங்கள் முழங்க காமராஜர் பிறந்தநாள் விழா பேரணி நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, கே.வி.சாலா பள்ளியில் 4656 மாணவர்கள் காமராஜரின் வேடம் ஏற்ற சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில், கே.வி.சாலா பள்ளியில் நடந்த இந்த சாதனை நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் 4656 பேர் காமராஜரை போல் கதர் சட்டை, வேட்டி, துண்டு அணிந்து, முகத்தில் காமராஜர் உருவம் பொறித்த மாஸ்களை அணிந்து கொண்டு, கல்வி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
தேசிய தலைவர் ஒருவரின் உருவத்தினை 4,656 நபர்கள் ஏற்று செய்த இந்நிகழ்வை உலகச்சாதனையாக இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்தது. முன்னதாக, காமராஜர் மணிமண்டபத்தில் அவரது உருவச்சலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காமராஜர் நினைவு இல்லத்தில் அவருடைய முழு உருவ சிலைக்கு பள்ளி மாணவ-மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவு இல்லத்தை சுற்றுவட்டார பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டு சென்றனர். இதில் காமராஜர் பயன்படுத்திய துணிமணிகள், பேனா, கட்டில், அவர் பயன்படுத்திய பாத்திரங்கள், காமராஜரின் அறிய புகைப்படங்கள், கையெழுத்து பிரதி உள்ளிட்டவை வரலாற்று பின்னணியுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் படித்து அறிந்து கொண்டனர்