சென்னை: சின்னசேலம் பள்ளி மாணவியின் பெயரைக் குறிப்பிட்டு நீதி கேட்டுப் போராட்டம் என்ற வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் போராட்டக்காரர்கள் திரண்டதாக உளவுத்துறை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி மர்ம மரணத்துக்கு நீதிகேட்டு நடந்த போராட்டத்தின் காரணமாக அப்பகுதி முழுவதுமே கலவரக்காடாக மாறியுள்ளது. காவல்துறையினர் பொதுமக்கள் என 30-க்கும் மேற்பட்டோர், இந்த கலவரத்தில் காயமடைந்துள்ளனர்.
தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகள், வகுப்பறைகள், கண்ணாடி ஜன்னல்கள், கணினி மற்றும் லேப்டாப்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தை கலைத்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது எப்படி என்பது குறித்து உளவுத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், மாணவியின் பெயரை சேர்த்து “நீதி கேட்டுப் போராட்டம்” என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழு நேற்று (ஜூலை 16) தொடங்கப்பட்டுள்ளது.
இந்த குழு தொடங்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் அந்த குழுவில் இணைந்துள்ளனர். இந்த போராட்டத்துக்கான அழைப்பு இந்த குழுவின் மூலம் பகிரப்பட்டுள்ளது என்று உளவுத்துறை போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.