புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது.
இதைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதற்காக நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் பேரவைகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யஷ்வந்த் சின்ஹாபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களத்தில் உள்ளார்.
மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 776 பேர், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 4,120 எம்எல்ஏக்கள் என 4,896 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர்.
எம்பி, எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்கு மதிப்பு உண்டு. அந்த வகையில் ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை பொறுத்தவரை மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் அவர்களின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
மிக அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு எம்ஏல்ஏவின் வாக்கு மதிப்பு 208 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 175 ஆக உள்ளது. மக்கள் தொகை குறைவாக இருக்கும் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 7 ஆக உள்ளது.
வாக்குச் சீட்டு முறை
இந்த தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப் படாது. வாக்குச்சீட்டு நடைமுறையில் தேர்தல் நடத்தப்படும். இதன்படி எம்பிக்களுக்கு பச்சை நிறத்திலும் எம்எல்ஏக்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட வேட்பாளரை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் வழங்கும் பிரத்யேக பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மக்களவை, மாநிலங்களவை சேர்ந்த எம்பிக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,200 ஆகும். சட்டப்பேரவை எம்எல்ஏக்களின் மொத்தவாக்கு மதிப்பு 5,43,231 ஆகும். எம்பி, எம்எல்ஏக்களின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10,86,431 ஆகும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்துக்கு அதிகமாக வாக்குகளைப் பெற வேண்டும். கடந்த சில வாரங்களாக திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்ஹாவும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வாக்குகளை சேகரித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் முர்மு பழங்குடி வகுப்பை சேர்ந்தவர் என்பதால் பல்வேறு எதிர்க்கட்சிகள் தாமாக முன்வந்து ஆதரவு அளித்துள்ளன.
அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம் பெறாத பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அகாலி தளம், தெலுங்கு தேசம், சிவசேனா, உள்ளிட்ட கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அவருக்கு சுமார் 6.61 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு சுமார் 4.19 லட்சம் வாக்குகள் கிடைக்கக்கூடும் என்று தெரிகிறது.
21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
சட்டப்பேரவைகளில் இன்று மாலை வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகளுக்கு சீல்வைக்கப்படும். பின்னர் அந்தந்த மாநிலங்களில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கப்படும். குடியரசுத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்றம், பேரவைகளில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி டெல்லியில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜூலை 25-ம் தேதி நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார்.