சின்னசேலம் அருகே மாணவி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் கலவரம்; பள்ளி தாளாளர், முதல்வர் கைது: போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த பேருந்துகள், போலீஸாரின் பைக்குகளை தீவைத்து எரித்தனர். கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர். கலவரத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மதி, இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி பள்ளி விடுதியின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் ஸ்ரீமதி உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

மாணவி உடலில் காயங்கள் இருப்பதாகவும், தங்கள் மகளை கொலை செய்துள்ளதாகவும் கூறி பெற்றோரும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், மாணவி உயிரிழப்புக்கு முன்பே உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது கை, கால்கள் உடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருதயம், கல்லீரல் உள்ளிட்ட 5 உறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதனால், ஆவேசமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு மாணவர் அமைப்பினரும் கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி. செல்வக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக காவல் துறை தலைமைக்கு தெரிவித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலை கள்ளக்குறிச்சி – சின்னசேலம் சாலையில் வாகனங்கள் செல்ல போலீஸார் தடை விதித்தனர். அப்போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள், இருசக்கர வாகனங்களில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு செல்ல முயன்றனர். போலீஸார் தடுப்புக் கட்டைகளை அமைத்து அவர்களை தடுத்தனர். அதையும் மீறி செல்ல முயன்றதால் போலீஸார் தடியடி நடத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா, சேலம் எஸ்பி ஸ்ரீஅபிநவ் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் காவலர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

பள்ளிவளாகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பேருந்துகளை அடித்து உடைத்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை கொண்டு பேருந்துகளை சேதப்படுத்தி, பின்னர் ஒவ்வொரு வாகனத்துக்கும் தீ வைத்தனர். 15 பேருந்துகள், 4 டிராக்டர், 3 ஜீப்கள் எரிக்கப்பட்டன.

அதன்பின் பள்ளி வகுப்பறைகளுக்கு சென்று மேஜை நாற்காலிகளை உடைத்தனர். சிலர், மேஜை நாற்காலிகளை தூக்கிச் சென்று வெளியில் போட்டு தீ வைத்தனர். ஒவ்வொரு அறைக்கும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் பள்ளி வளாகம் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸாரின் பைக்குகளும் எரிக்கப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து வஜ்ரா வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

அதன்பிறகும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். போலீஸாரின் வஜ்ரா வாகனத்தை உடைத்து சேதப்படுத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய கலவரம், பகல் 1 மணியைத் தாண்டியும் நீடித்தது. கலவரத்தை ஒடுக்க பகல் 1 மணி அளவில் போலீஸார் வானத்தை நோக்கி இருமுறை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், நாலாபுறமும் சிதறி ஓடிய இளைஞர்கள், மீண்டும் தாக்குதலை தொடர்ந்தனர்.

இதையடுத்து சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டினர். பிற்பகல் 3 மணிக்கு பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.இந்த கலவரத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி விசாரணை

வன்முறை நடந்த பள்ளி வளாகத்தை உள்துறைச் செயலர் பணீந்தர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்ட 70 பேரும்
கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.

மக்கள் அமைதி காக்க முதல்வர் வேண்டுகோள்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தம் அளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.

உள்துறை செயலரையும், டிஜிபியையும் கள்ளக்குறிச்சி செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.