குடியரசுத் தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதியன்று இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராகப் பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையின் உறுப்பினர்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். குடியரசுத் தலைவருக்கான தேர்தல், நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் நடைபெறவுள்ளது. டெல்லி செல்ல முடியாத எம்.பி.க்கள் மாநில சட்டமன்றங்களில் தங்களது வாக்குகளை செலுத்தலாம்.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை வளாகத்தில் உள்ள குழு கூட்ட அறையில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ள ஓட்டுப்பெட்டி கடந்த 12ஆம் தேதி பாதுகாப்புடன் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை தலைமைச் செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலை நடத்துவதற்காக உதவி தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளார். 2 வேட்பாளர்களுக்கும் தலா 3 முகவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வாக்குச்சீட்டில் வைலட் நிற பேனா மூலம் வாக்களிக்க வேண்டும். அதற்கான பிரத்யேக பேனா வாக்குப்பதிவு அலுவலகத்தில் வழங்கப்படும். வாக்குச்சீட்டில் 2 வேட்பாளர்களின் பெயருக்கு அருகில் ஒரு கட்டம் இருக்கும். அதில், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் விரும்புகிறார்களோ, அந்த கட்டத்தில் ஒன்று என்று எழுத வேண்டும். இரண்டாவது வேட்பாளர்களுக்கு, வாக்களிக்க விரும்பினால் இரண்டு என்று எழுத வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க பிங்க் நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்படும். எம்.பி.க்கள் வாக்களிக்க பச்சை நிறத்திலான வாக்குச்சீட்டு வழங்கப்படும். இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு, இன்று இரவே சென்னையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் வாக்குப்பெட்டி அனுப்பி வைக்கப்படும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இவர்கள் இருவரில் திரவுபதி முர்மு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.