ஐதராபாத்: தெலங்கானாவில் கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் 46.9 சதவீத வாக்குகளுடன் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) 88 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 28.4% வாக்குகளுடன் காங்கிரஸ் 2-வது இடத்தை பிடித்தது. பாஜ வெறும் 7.1 % வாக்குகளுடன் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்புகளில் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி, பாஜ 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் டிஆர்எஸ் 38.88% வாக்குகள் மற்றும் காங்கிரஸ் 23.71% வாக்குகள் மட்டுமே பெறும் என்றும், பாஜ 30.48 சதவீத வாக்கு பெறும் என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐதராபாத்தில் பாஜ தேசிய செயற்குழு கூட்டம் நடத்தப்பட்ட போது கூட, தெலங்கானாவில் விரைவில் பாஜ ஆட்சி அமையும் என தலைவர்கள் பேசியது குறிப்பிடத்தக்கது.