குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.
குடியரசு தலைவர் தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் டெல்லி சென்று வாக்களிக்க முடியாத, எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் வாக்களிக்க உள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கொரோனா தொற்று காரணமாக கடந்த 14ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.
இது குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது, ஓ பன்னீர்செல்வம் கொரோனா தொற்று முழுமையாக நீங்கி, மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புகிறார். இதையடுத்து, அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பார் என தெரிவித்துள்ளனர்.