புந்தேல்கண்ட் விரைவுச்சாலை சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் இப்போது டெல்லியிலிருந்து உபி மாநிலத்தில் உள்ள சித்ரகூடுக்கு ஆறு மணி நேரத்தில் பயணம் செய்யலாம்.
உத்தரபிரதேச மாநிலம் ஜலான் நகரில் 296 கிமீ நீளமுள்ள பண்டேல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த தொடக்க விழாவில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புந்தேல்கண்ட் விரைவுச்சாலை தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் நீளம் முதல் செலவு வரை அனைத்து விபரங்களையும், அதேபோல் இந்த விரைவுச்சாலை இணைக்கப்பட்டுள்ள நகரங்களையும் இப்போது பார்ப்போம்
சாலை விபத்துக்கள் இந்தியாவின் ஜிடிபியை பாதிக்கின்றதா? உலக வங்கியின் அறிக்கை
28 மாதங்களில் முடிக்கப்பட்டது
புந்தேல்கண்ட் விரைவுச் சாலைத் திட்டம் 28 மாதங்களில், அதன் அட்டவணைக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டது. மேலும் புந்தேல்கண்ட் விரைவுச் சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக இருக்கும் நிலையில் விரைவில் இது ஆறு வழிச்சாலையாக விரிவாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
புந்தேல்கண்ட் விரைவுச் சாலையின் செலவு
296 கி.மீ நீளமுள்ள நான்கு வழி விரைவுச்சாலை சுமார் ரூ. 14,850 கோடி செலவில், உத்தரப் பிரதேச எக்ஸ்பிரஸ்வேஸ் இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் அத்தாரிட்டியின் (UPEIDA) கீழ் கட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இ-டெண்டரிங் தேர்வு செய்ததன் மூலம், உபி அரசு சுமார் ரூ.1,132 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது.
நகரங்கள் இணைப்பு
இந்த விரைவுச்சாலை, ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலை மற்றும் யமுனா விரைவுச்சாலை வழியாக புந்தேல்கண்ட் பகுதியை டெல்லியுடன் இணைக்கும். அதிநவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ள புந்தேல்கண்ட் விரைவுச் சாலை சித்ரகூட், பண்டா, மஹோபா, ஹமிர்பூர், ஜலான், அவுரையா மற்றும் எட்டாவா ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக செல்கிறது.
8 நதிகள்
புந்தேல்கண்ட் விரைவுச் சாலை பேகன், கென், ஷ்யாமா, சந்தவால், பிர்மா, யமுனா, பெட்வா மற்றும் செங்கர் ஆகிய 8 நதிகளைக் கடந்து செல்கிறது என்றும் அதிக நதிகளை கடந்து செல்லும் சாலைகளில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
பயண நேரம்
இதுவரை டெல்லியில் இருந்து சித்ரகூடு நகரத்திற்கு 9 முதல் 10 மணி நேரம் பயண நேரமாக இருந்த நிலையில் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை மூலம் தற்போது சுமார் 6 மணி நேரத்தில் பயணம் செல்லலாம்.
என்ன பயன்கள்
புந்தேல்கண்ட் விரைவுச் சாலை பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் ஊக்கத்தை அளிக்கும் என்றும், இந்த சாலையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் உத்தரபிரதேச பாதுகாப்பு வழித்தட திட்டத்தின் வெற்றிக்கு புந்தேல்கண்ட் விரைவுச்சாலை முக்கியமானது என்றும், விமானப்படை அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக விமான ஓடுதளங்களை உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்துறை
இந்த சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டதால் பண்டா மற்றும் ஜலான் மாவட்டங்களில், தொழில்துறை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் உபி மாநிலத்தின் மேற்கு, மத்திய மற்றும் புந்தேல்கண்ட் பகுதியில் ரூ.20,000 கோடி மதிப்பிலான தொழிற்சாலைகள் அமையம் என கூறப்படுகிறது.
Bundelkhand Expressway Inaugurated: Now Travel From Delhi To Chitrakoot In Just Six Hours
Bundelkhand Expressway Inaugurated: Now Travel From Delhi To Chitrakoot In Just Six Hours | 296 கிமீ, ரூ. 4,850 கோடி செலவு… அசர வைக்கும் டெல்லி-சித்ரகூடு எக்ஸ்பிரஸ் சாலை