ஸ்ரீநகர்: கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றதால் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த மோதலை அடுத்து லடாக் எல்லையில் இரு நாட்டு படைகள் குவிக்கப்பட்டன. லடாக் எல்லையில் பதற்றத்தை குறைக்க இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்பு கொண்டன. அதன் பலனாக இதுவரை 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் இருதரப்பிலும் எல்லையில் உள்ள துருப்புகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 16வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று துவங்கியது. இந்திய எல்லைக்கு உட்பட்ட சுசூல் மோல்டோ பகுதியில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா, சீனாவின் சார்பாக மேஜர் ஜெனரல் யாங் இன் பங்கேற்றனர்.