புதுடெல்லி: ஆளுநர் பதவி என்பது அலங்கார பதவியும் இல்லை, அரசியல் செய்யும் பதவியும் அல்ல மாறாக ஆளுநர்கள் மாநிலங்களுக்கு சிறந்த வழிகாடிகளாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில் மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கு மதிய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, ஆளுநர் பதவி என்பது அலங்கார பதவியும் அல்ல, அரசியல் செய்யும் பதவியும் அல்ல. ஆளுநர்கள் மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். பல்கலைக்கழக வேந்தர்கள் என்ற முறையில் அவர்களால் எத்தனை பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியுமோ அத்தனை இடங்களுக்குச் சென்று மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், தேசிய கல்விக் கொள்கை அமலாவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல் காசநோய் உள்ளிட்ட நோய்களை ஒழிப்பதில் ஆளுநர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை செய்ய வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மக்களை ஊக்குவித்தது எப்படி நாட்டில் நல்ல பலன்களைக் கொடுத்துள்ளது என்பதே காசநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நல்ல முன்னோடி.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.
அதேபோல் விரைவில் விடைபெறவிருக்கும் தனக்கு நல்ல பிரிவு உபச்சார பரிசாக அமைதியான சுமுகமான மழைக்கால கூட்டத்தொடரை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெங்கய்ய நாயுடு கடந்த 2017ல் குடியரசு துணைத் தலைவராக தேர்வானார். அவரது பதவிக்காலம் வரும் ஆக்ஸ்ட் 10ல் நிறைவடைகிறது. அந்தப் பதவிக்காக இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜக்தீப் தங்கரும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடவிருக்கின்றனர்.