இலங்கையில் மீண்டும் அவசரநிலை அமல்..!!

கொழும்பு,

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் பதவி விலகினார்.

இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இடைக்கால அதிபராக பதவியேற்று உள்ளார். புதிய அதிபருக்கான தேர்தல் 20-ந்தேதி நடக்கிறது.

கோத்தபய ராஜபக்சே பதவி விலகினாலும், எதிர்ப்பை கைவிடாத போராட்டக்காரர்கள் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த அரசு அமைப்பையும் மாற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்த சூழலில் இலங்கையில் பொதுமக்களுக்கு உணவு சென்றடைவது பாதிப்பதற்கு அதிகப்படியான பணவீக்கமே காரணம் என இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றில் உரையாற்றும்போது அவர் கூறுகையில், ‘இலங்கையில் சுமார் 60 லட்சம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை 75 லட்சம் வரை இருக்கலாம் என்று மற்ற அறிக்கைகள் கூறுகின்றன. இலங்கையின் சராசரி நெல் உற்பத்தி பொதுவாக 2.4 கோடி மெட்ரிக் டன்னாகும். இருப்பினும், 2021-ல் உற்பத்தி 1.6 கோடி மெட்ரிக் டன்னாக குறைந்தது’ என்று தெரிவித்தார்.

எனவே இலங்கை தனது அரிசி தேவையில் மூன்றில் ஒரு பங்கை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது எனக்கூறிய விக்ரமசிங்கே, உணவுப்பாதுகாப்பு தொடர்பான ஜி7 உலகளாவிய கூட்டணி, உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு 14 பில்லியன் டாலர்களை வழங்கியதாகவும் கூறினார். எனினும் சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையை சரிவில் இருந்து பாதுகாப்பதற்கு நிறைய செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே அதிக கடன் அளவுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட கொள்கைகளைக் கொண்ட நாடுகளுக்கு இலங்கை ஒரு எச்சரிக்கை அறிகுறியாக உள்ளதாக சர்வதேச நிதியம் கூறியுள்ளது.

இலங்கை பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் மோசமடைந்து வரும் நிலையில், நாட்டில் மின்சாரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் இன்றும், நாளையும் தலா 3 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்த உள்ளதாக மின்துறை அறிவித்து உள்ளது.

இதனிடையே அதிபர் ஆட்சி முறையை ரத்து செய்து, இந்த அமைப்பை முழுமையாக மாற்றுவதற்கான தங்கள் இலக்கை அடையும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவின்பேரில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் இன்று (ஜூலை 18) முதல் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.