புதுடெல்லி: சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், அம்மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பதவியிலிருந்து டி.எஸ்.சிங் தியோ நேற்று முன்தினம் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரம், சுகாதாரம் மற்றும் குடும்பநலம், மருத்துவக் கல்வி, 20 அம்ச திட்ட அமலாக்கம் மற்றும் வணிக வரித் துறை அமைச்சர் பதவியில் தியோ தொடர்வதாக கூறப்படுகிறது. ஆனால் பதவி விலகல் கடிதம் தனக்கு வரவில்லை என முதல்வர் பாகேல் தெரிவித்துள்ளார்.
டி.எஸ்.சிங் தியோ முதல்வருக்கு எழுதியுள்ள 4 பக்க பதவிவிலகல் கடிதத்தில், “தேர்தலின்போது வீடு இல்லாத 8 லட்சம் ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்குமாறு தொடர்ந்து உங்களிடம் கோரிக்கை வைத்தேன். இந்தகோரிக்கையின்படி நிதி ஒதுக்காததால், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. ஒருவருக்குக் கூட வீடு கட்டித்தரப்பட வில்லை” என கூறப்பட்டுள்ளது.
இதனால் சத்தீஸ்கர் அரசில் குழப்பம் நிலவுகிறது.