தமிழகத்தின் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 19, 20 ஆகிய நாட்களில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இன்று முதல் ஜூலை 22 வரை தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 8 சென்டிமீட்டரும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 7 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இலங்கையை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசுவதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.