காஷ்மீர் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்தததில் ராணுவ கேப்டன் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தனர்.
குளிர்காலம் தொடங்கிவிட்டதால் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக உளவுத்துறை அண்மையில் எச்சரித்திருந்தது. குளிர்காலத்தில் உறைப்பனி வெப்பநிலை காஷ்மீரில் நிலவும் என்பதால், பனிமூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் அதிக அளவில் ஊடுருவுவது வழக்கம்.
இதனிடையே, உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு – பகலாக வாகனச் சோதனையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில் அங்கிருந்த ராணுவ கேப்டன் ஆனந்த் மற்றும் ராணுவ வீரர் நயீப் சுபேதார் பகவான் சிங் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
விசாரணையில், ராணுவத்தினர் வைத்திருந்த குண்டு வெடித்தே அவர்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என ராணுவ செய்தித் தொடர்பாளர் தேவேந்தர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM