குடியரசு துணை தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் ஜக்தீப் தன்கர் வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாட்டின் 13வது குடியரசுத் துணைத் தலைவராக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கையா நாயுடு பதவி வகிக்கிறார். இவரது பதவிக்காலம், வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இம்மாத தொடக்கத்தில் தொடங்கிய நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நாளை ஆகும்.

இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் அல்வா களமிறங்குகிறார்.

இந்நிலையில் இன்று, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர், நாடாளுமன்ற செயலகத்தில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமதச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக மூத்தத் தலைவர் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஜக்தீப் தன்கர், “என்னைப் போன்ற சாமானியனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. விவசாயியின் மகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த வாய்ப்பிற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.